திருப்பூர்: மிதிவண்டி உதிரி பாகங்கள் விற்கும் கடையின் உரிமையாளரை தம்முடன் பிச்சை எடுக்க வருமாறு திருப்பூரைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் அழைத்துள்ளார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கடைவீதியில் பல பிச்சைக்காரர்கள் தினமும் பிச்சை எடுத்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் பெரிய சாட்டையால் தம்மைத்தாமே அடித்துக்கொண்டு பிச்சை எடுக்கிறார்.
அண்மையில் அங்குள்ள மிதிவண்டி உதிரி பாகங்கள் விற்கப்படும் கடைக்குச் சென்ற அவர், அந்தக் கடையின் உரிமையாளரிடம் பிச்சை கேட்டுள்ளார். அதற்குக் கடை உரிமையாளர், பிச்சைக்காரருக்கு அறிவுரை கூறினார்.
கை,கால்கள் நன்றாக இருப்பதால் தனது கடையிலேயே வேலை தருவதாகவும் தினமும் 400 ரூபாய் சம்பளம் தருவதாகவும் அந்தக் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
அவர் சொன்னதைக் கேட்ட, பிச்சைக்காரர், தாம் நாள்தோறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் வெறும் நானூறு ரூபாய்க்கு வேலை பார்க்க முடியாது என்றும் கூறுகிறார்.
இந்தப் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், "இப்படி ஓசியில் பணம் கொடுத்தால் நீ சம்பாதிக்கத்தான் செய்வாய்," என்று ஆதங்கத்துடன் கூற, அதற்கும் பதிலடி கொடுக்கிறார் பிச்சைக்காரர்.
"பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள், இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். வேண்டுமானால் நீங்களும் என்னுடன் பிச்சை எடுக்க வரலாம். நான் தினமும் இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன்," என்று கூறிவிட்டு நடையைக் கட்டுகிறார் பிச்சைக்காரர்.
கடையில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் இந்தக் காட்சி பதிவாகி உள்ளது.

