செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ad82997b-18d8-4412-9770-4639a0927c8e
-

கஞ்சா விற்றால் சொத்துகள் முடக்கம்

மதுரை: கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது இனிமேல் குற்ற விசாரணையுடன் நிதி குறித்த விசாரணை யும் நடத்தப்படும் என்று தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு மட்டுமல்லாது சொத்துகளும் முடக்கப்படும் என எச்சரித்தார். "மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்க ளில் இதுவரை 11 பேரின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அஸ்‌ரா கார்க்.

தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஒரு பெண் நிய மிக்கப்பட வாய்ப்புள்ளதாக நடப்பு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரசின் உள்கட்சித் தேர்தல் ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் என்றார். "தமிழ்நாடு காங்கிரசில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். மாநிலத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேர்தல் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். மாநிலத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கும் திட்டம் உள்ளது," என்றார் கே.எஸ்.அழகிரி.

கடல்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

தூத்துக்குடி: இலங்கையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் அங்கிருந்து அகதிகள் எனும் போர்வையில் வரும் சமூக விரோதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால், தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுக்காவல் பணி தீவிரம் அடைந்துள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் கடலில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் சோதனையிடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா, சிங்கப்பூர் போன்று தமிழகம் மாறும்: அமைச்சர் நம்பிக்கை

நெல்லை: தமிழகத்தை மலேசியா, சிங்கப்பூர் போல மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்து வருவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மலேசியா, சிங்கப்பூர் போன்று தமிழகத் தின் பொருளாதார நிலையும் உயர்த்தப்படும் என்றும் அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

கார்த்தி: பிரதமரைக் கொன்றவர்களை கதாநாயகர்கள் ஆக்க வேண்டாம்

சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவருடன் சேர்ந்து இறந்தவர்கள் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் ராஜீவைக் கொன்றவர்களைக் கதாநாயகர்களாக்க வேண்டாம் என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தம்மை விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தாம் அளித்த ஒரு பேட்டியின் காணொளியையும் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து திருநங்கைகள் ரகளை

கரூர்: அரசுப் பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டதை அடுத்து, பயணிகள் சிலர் அவர்களை உடனடியாக பேருந்தை விட்டு இறங்கச் சொன்னதால் வாக்குவாதம் மூண்டது. பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த திருநங்கைகள் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கரூரில் பரபரப்பு நிலவியது. தங்களைத் தடுக்க முற்பட்ட காவல்துறையினர், செய்தியாளர்களையும் திருநங்கைகள் தாக்கினர்.