அலகாபாத்: தாஜ்மகாலில் புதைந்துள்ள ரகசியங்களை அம்பலப்படுத்த உத்தரவிடக் கோரி, பாஜக நிர்வாகி தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் மனதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உலக அதிசயங்களுள் ஒன்றான புகழ்பெற்ற தாஜ்மகால் அைமந்துள்ளது.
மனைவி மும்தாஜ் நினைவாக மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மகால், ஒரு காலத்தில் சிவன் கோயிலாக இருந்ததாக சில அமைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி திரு ரஜ்னிஷ் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தாஜ்மகால் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த, அங்கு பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறக்க உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், பூட்டிக் கிடக்கும் அறைகளைத் திறந்து உண்மை கண்டறியும் குழு மூலம் ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்தபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தாஜ்மகால் கட்டப்பட்ட இடம் சிவன் கோயில் இடமா அல்லது மசூதி இடமா எனத் தான் கேட்க வில்லை என்றும் அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், ஒரு இடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடவேண்டும் என எந்தச் சட்டத்தில், எங்கு கூறப்பட்டுள்ளது என்று வினவினர்.
இதுகுறித்து பிஎச்டி படிப்பில் தலைப்பு எடுத்து ஆராய்ச்சி செய்ய மனுதாரருக்கு தடை இல்லை என்றும் தெரிவித்தனர்.
இன்று தாஜ்மகால் அறையை திறக்கச் சொல்வீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும் ஆய்வு செய்யவும் அனு மதிக்கவேண்டும் என கோருவீர்களா? என்று கேட்டனர்.
பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என மனு தாரருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

