ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவே கானந்தா விமான நிலைய ஓடு பாதையில் அரசு ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர் விமான நிலையத்தில் வழக்கமாக நடைபெறும் பயிற்சியின்போது, ஓடுபாதையில் விமானத்தை இயக்கிப் பார்த்து விமானிகள் பயிற்சி எடுத்துக்கொள்வர்.
இதுபோல், விமானிகள் கேப்டன் கிருஷ்ணா பாண்டேவும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவாவும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓடுபாதையில் எதிர் பாராதவிதமாக நடந்த விபத்தில், விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது.
இரு விமானிகளில் ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித் துள்ள இரங்கல் செய்தியில், "ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் மாநில ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான துன்பமான செய்தி கிடைத்தது.
இவ்விபத்தில், எங்கள் விமானிகள் கேப்டன் பாண்டே, கேப்டன் ஸ்ரீவஸ்தவா இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு கடவுள் பலத்தையும் இறந்த ஆன்மாவுக்கு சாந்தியையும் தரட்டும். விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.

