சென்னை: மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
வரும் 17ஆம் தேதி வரை கேரளா, லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், "இன்று 14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ெபரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
"சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
"நாளை 15ஆம் தேதியும் 16, 17ஆம் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
"சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்," என வானிலை மையம் தெரிவித்துள்ளதாக நியூஸ் 18 ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், இப்போது கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து நிம்மதி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்யாறு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
கிருஷ்ணகிரியில் குளிர்ந்த சாரல் காற்று வீசியதால், மலைப் பிரதேசங்களைப் போன்று மிகவும் சில்லென்ற பருவ நிலை நிலவியது.
மற்றொருபுறம், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லுாரிக்குச் சென்ற மாணவர்கள், வேலைக்குச் சென்ற கூலியாட்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், நேற்று மாலை வரை இதேநிலை தொடர்ந்ததால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட தாகவும் தகவல்கள் கூறின.