பட்டுக்கோட்டை: சூரப்பள்ளம் கிராமத்தில் பக்தர்கள் தேரை தூக்கிச் செல்லும் தூக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைெபற்றது.
வழக்கமாக கோயில்களில் நடைபெறும் விழாக்களில் ேதரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது வழக்கம். ஆனால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுசேர்ந்து தேரை தோளில் சுமந்துசென்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சூர மாகாளியம்மன் கோயிலில் தூக்குத் தேர்த் திருவிழா நடை பெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரை தோளில் சுமந்தவாறு பக்தர்கள் அங்குள்ள குளக்கரையைச் சுற்றி வந்தனர்.
இந்த தூக்குத் தேரோட்டத்தைக் காண உள்ளூர், சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.
40 அடி உயரமும் 6 டன் எடையும் கொண்ட தேரை சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஏழு குழுவினர், நான்கு பிரிவுகளாக, தனித்தனி சீருடை அணிந்து தூக்கியபடி ஊர்வலம் வந்தனர். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தூக்குத் தேர் ஊர்வலம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.

