செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0903bf28-c1e5-47bb-8fc6-fbd608dbe62f
-

கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் கொல்லப்பட்டதைக் கண்டித்து விமான நிலைய சாலையை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களைக் காவலர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர்.

காஷ்மீரின் புத்கம் பகுதியில் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியரான ராகுல் பட், நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது கொலைக்கு நீதி கேட்டு உறவினர்களும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு மின்விசிறிகள் பயன்பாட்டுக்கு ரூ.2.5 லட்சம் மின் கட்டணம்

சண்டிகார்: ஹரியானாவில் மில்தொழிலாளி ஒருவரின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், இரண்டு பல்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் ரசீது அனுப்பியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பத்தேபாத்தைச் சேர்ந்த சாயம் பூசுபவரான பிரேம்குமார் என்ற ஊழியர், இதுகுறித்து மின்சார வாரியத்தில் புகார் கூறினார். ஆனால், அங்கு யாரும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் தனிப் பிரிவுக்கு அவர் புகார் கடிதம் அனுப்பி முறையிட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகத் திரு ராஜீவ் குமாரை அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தற்போது பொறுப்பில் உள்ள திரு சுஷில் சந்திரா இன்று (14ஆம் தேதி) பதவி ஓய்வுபெறுகிறார். அதன்பிறகு, 15ஆம் தேதி திரு ராஜீவ் குமார் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ராஜீவ்குமாருக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் காங்கிரஸ்

மாநாடு தொடங்கியது

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் இக்கட்சியின் 'சிந்தனை அமர்வு' என்ற மூன்று நாள் மாநாடு நேற்று தொடங்கியது. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இத்தகைய மாநாடு நடக்கிறது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொடக்க உரையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நன்றியுரையும் ஆற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையைக் கண்டறிவதே சிந்தனை அமர்வின் முக்கிய அம்சம். மேலும் எதிர்கால யுக்திகள், பொதுப் பிரச்சினைகள், செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கக்கூடும் எனவும் தெரிகிறது.

சாலையின் நடுவே புகைப்படம் எடுத்த இருவர் மருத்துவமனையில்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சாலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இருவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி புகைப்படக் கருவியில் பதிவான காட்சிகளில், ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் ேமாதிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

மலப்புரம் காவல்நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொண்டர்கள் இருவர் சாலையின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது இவ்விபத்து நேர்ந்தது.