சென்னை: தமிழகத்தில் வங்கிப் பணிகளுக்குத் தேர்வு பெற தமிழ் தெரிந்திருப்பது கட்டாயமில்லை என்று வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, முன்பு தமிழகத்தில் உள்ள வங்கிகளில் சுமார் 30 விழுக்காடு அளவில் வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும் தற்போது, இந்த எண்ணிக்கை 50% ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி உள்ள ஜி.கருணாநிதி, இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதும் தமிழ் தெரிந்த பணியாளர்களிடம் செல்லுமாறு அவர்கள் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது," என்றார் ஜி.கருணாநிதி.

