தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் கடந்த 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இவருக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது. அடுத்த இரு வாரங்களில் கணவர் மாரடைப்பால் காலமானார். அதற்குள் தாய்மையடைந்த பேச்சியம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது திருமணத்துக்கு குடும்பத்தார் வற்புறுத்தியபோதும் மறுத்துவிட்டார்.
இதையடுத்து பாலியல் உள்ளிட்ட தொல்லைகளில் இருந்து தப்பிக்க தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டார். ஆண்களைப் போன்ற சிகையலங்காரம், ஆண்கள் அணியும் ஆடையுடன், தன் பெயரையும் முத்து என மாற்றிக் கொண்டார்.
அனைவரும் இவரை மாஸ்டர் அல்லது அண்ணாச்சி என்று குறிப்பிடுகின்றனர்.
கடினமாக உழைத்து தன் மகளை வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து கொடுத்துள்ள முத்து என்ற பேச்சியம்மாளுக்கு இப்போது 57 வயதாகிவிட்டது.
எந்த நோக்கத்துக்காக தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டாரோ, அது நிறைவேறிவிட்டது என்கிறார்.
"ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்திலும் எனது பெயர் முத்து என்றுதான் உள்ளது. இதனால் பெண்களுக்கான உதவித்தொகை எதுவும் கிடைக்கவில்லை. எனது ஏழ்மை நிலையைக் கருதி, அரசாங்கம் முதியோர் உதவித்தொகை அளித்தால் நன்றாக இருக்கும்," என்கிறார் பேச்சியம்மாள்.

