இலங்கை முன்னாள் எம்.பி. கோரிக்கை
சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக
தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி, தமிழக அரசு நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக்கியதுதான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றார் சிவாஜிலிங்கம்.
சிவன்: இளையர்கள் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்
சென்னை: இன்றைய இளம் பட்டதாரிகள் வேலை தேடி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அலையக்கூடாது என்றும் வேலையைத் தேடிச்செல்லாமல் இளையர்கள் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுறுத்தி உள்ளார். இளையர்கள் தங்களையே முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் பிறரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: இலங்கையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கிருந்து கடத்தி வரப்பட்ட 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஷாஜிதா யாஸ்மின் ஆகிய இருவரின் உடைமைகளையும் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, 72.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 2.11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

