நெல்லை: நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் நின்று கொண் டிருந்த ஆறு ஊழியர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
இந்த ஆறு பேரின் நிலை தெரியாமல் அவர்களது உறவினர்கள் கலங்கினர்.
இந்நிலையில், நேற்று காலையில் இருவர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் கிராமத்திற்கு அருகே உள்ள கல்குவாரியில் உடைத்து வைக்கப்பட்டிருந்த கற்களை லாரிகள் மூலம் எடுத்துச்செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராதவிதமாக ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில், கல்குவாரிக்கு கீேழ வேலை பார்த்த இரு லாரி ஓட்டுநர்கள் உள்பட ஆறு பேர் விபத்தில் சிக்கினர்.
ஒருவர் பாறை குவியலில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அவரது அழுகுரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறின.
இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்துவரும் மழையால் 300 அடி பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மழையின் காரணமாக பள்ளத்தில் மண்சரிவு, கற்கள் விழுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பில் கல்குவாரி உரிமம் பெற்ற சங்கர நாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குத்தகையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து பிபிசி ஊடகத்துக்கு நெல்லை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு அளித்த நேர்காணலில், "நெல்லை மாவட்டம், தருவை கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆறு தொழிலாளர்கள் சிக்கினர். அதில் இருவர் உயிருடன் மீட்கப் பட்டு உள்ளனர்.
"நால்வரை மீட்பதற்கு இந்திய கடற்படையின் உதவி, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவி கோரப்பட்டது. ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டுள்ளது.
"அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட மீட்புப் படையினர் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.
"விபத்தில் சிக்கித் தவிக்கும் ஆடவருக்கு திரவ உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.
"குவாரியில் விதிமீறல் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
"முதலில் விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.

