சென்னை: உக்ரேனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே படிப்பைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரேன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், போர் பதற்றம் காரணமாக உக்ரேனில் மருத்துவப் படிப்பு மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் 1,896 பேர் தமிழகம் திரும்பிஉள்ளதாகக் குறிப்பிட்டனர்.
உக்ரேன், ரஷ்யா போர் காரணமாக நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சுமார் 4,000 பேர் இறுதியாண்டு மாணவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், அந்த 4,000 பேர் மட்டும், இந்தியாவில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
"நாடு முழுவதும் 600 மருத்துவக் கல்லூரிகள் (தமிழகத்தில் 67) உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் 27 இடங்களை அதிகரித்தால் மீதமுள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் அளிக்க முடியும்.
"புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.
"இந்தக் கல்லூரிகளில் இரண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மாணவர்களைச் சேர்க்க முடியும். பல மாநில அரசுகள் தங்கள் மாணவர்கள் இங்கேயே படிப்பைத் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
"அதனால், அந்தந்த மாநிலங்களில் மாணவர்கள் படிப்பைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என உக்ரேன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரேன் போலவே மருத்துவப் படிப்புக்கான பாடப்பிரிவுகள் இருக்கும் மற்ற நாடுகளில் மாணவர்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த அடிப்படையில் போலந்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் இந்திய மாணவர்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றும் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு மனதிற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

