சென்னை: எதிர்வரும் 26ஆம் தேதிஅன்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழகம் வரும் பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசின் கோரிக்கைகள் உள்ளடக்கிய மனு ஒன்றை அவர் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 12,413 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை அமைச்சின் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும். அதில் சென்னையில் அமைக்கப்படும் நான்கு வழி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்டப் பணி உட்பட மேலும் சில புதிய சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
மேலும், மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயுத் துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதற்கிடையே, பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கைத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதமே பிரதமர் மோடி தமிழகம் வர இருந்தார். அப்போது தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை அவர் திறந்து வைப்பதாக இருந்தது. எனினும் கொரோனா நெருக்கடி காரணமாக அவரது பயணம் கைவிடப்பட்டது.

