சென்னை: தமிழகத்தில் தமது ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று விரும்புவதாகவும் இதற்கு உறுதுணையாக உள்ள தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான பல வழிகாட்டுதல்களை வழங்கவே 'நான் முதல்வன்' திட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.
தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில், நேற்றைய நிகழ்வில் இருவரும் பங்கேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் கூறக்கூடாது என்றும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் கூறக்கூடாது என்றும் கூறினார்.
அத்தகைய நிலையை எட்டுவதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் அவர். அனைத்து பல்கலைக்கழகங்களும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம், கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைப் போல, எனது தலைமையிலான ஆட்சிக் காலம் உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என திட்டமிட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
"நிதி பற்றாக்குறை இருந்த போதும் மாணவர்களின் நலன் கருதி பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது மாணவர்களுக்கான அரசு.
"சென்னை பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்ற திட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அளிக்கும் சிறந்த சொத்து கல்விதான்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

