தஞ்சை: தொண்டர்களின் தியாகத்தால் உயர்ந்த இயக்கமான அதிமுகவைக் காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது என சசிகலா கூறி இருப்பது அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது என்று ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு சோதனை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற சோதனை ஏற்பட்டுள்ளது என்றார்.
"அன்றைக்கு எப்படி அதிமுக மீண்டெழுந்ததோ, அதேபோல் தற்போதும் கட்சி புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாவேன். அதுவரை நான் ஓயமாட்டேன்," என்று சசிகலா ஆவேசமாகப் பேசினார்.
காலம் என்ற நியதி இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
"எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அதிமுக எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்துதான் வந்துள்ளது," என்றார் சசிகலா.

