சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணியில் 21 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய டெங்கி நோய் தடுப்பு தினத்தையொட்டி நேற்று முன்
தினம் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
அதைப் பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் டெங்கி கொசு ஒழிப்புப் பணிக்கு புகைத்தெளிப்பான் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்
களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் டெங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 21 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதற்காக வாகனத்தில் பொருத்தப்பட்ட 1,112 புகை அடிப்பான்கள், கையில் எடுத்துச்செல்லும் 7,087 புகை அடிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 7,654 சிறிய புகை அடிப்பான்களும் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.
மேலும் கொசு ஒழிப்பு மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதையும் அவர் உறுதி செய்தார்.
"காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு உடனடியாகச் சென்று பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றன. 'எலிசா' முறையில் டெங்கி காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது," என்றார் மா.சுப்பிரமணியன்.
சுகாதாரத்துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு துறை
களுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தொடர்ந்து நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழகத்தில் தொற்று நோய்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் டெங்கி காய்ச்சலைக் கண்டறிவதற்கு 66,747 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை 2,485 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
உரிய நேரத்தில் காய்ச்சல் கண்டறியப்படுவதால் மாநிலத்தில் டெங்கி காய்ச்சலுக்குப் பலியாவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் நடப்பாண்டில் டெங்கி மரணம் ஏதும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.