விழுப்புரம்: கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களை யாரோ திருடிச் சென்றுவிட்ட நிலையில், உக்ரே னைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கடந்த பத்து நாள்களாக உணவு, உதவி இன்றி தவித்து வருகிறார்.
உக்ரேனைச் சேர்ந்த ஜெர்சி என்பவர் கடந்த 1985 முதல் 1989 வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழித் துறையில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் புதுவை ஆரோவில் அனைத்துலக நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் பெங்களூரு சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது இவரது கடப்பிதழ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பையை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து அவர் காவல்
துறையில் புகார் அளித்துள்ளார். எனினும் கடப்பிதழ் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த பத்து நாள்களாக கையில் பணம் இன்றி, தங்குவதற்கு இடமும் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளார் ஜெர்சி.
இதையடுத்து, பொது இடங்களில் தங்கி நாள்களைக் கடத்தி வரும் அவர், "உக்ரேனைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியருக்கு உதவுங்கள்," எனும் வாசகம் அடங்கிய தகவல் பலகையை கையில் ஏந்தியபடி உதவிக்காக காத்திருக்கிறார்.
கடந்த பத்து நாள்களாக அவர் குடிநீருக்குக்கூட வழியின்றி, பட்டினியுடன் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு காவல்துறையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் உதவி செய்து, தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

