சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அது மக்கள் ஆட்சியாக விளங்கும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் அதிமுகவில் இணைவது உறுதி என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பின்னர் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், இன்னும் ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில்தான் உள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என அக்கட்சித் தலைமை தொடர்ந்து திட்டவட்டமாக கூறி வருகிறது.
இந்நிலையில், தாம் அதிமுகவில் இணையப்போவது நிச்சயம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சிரமங்களை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஓராண்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளதாக திமுகவினர்தான் சொல்லி வருகிறார்களே தவிர, மக்கள் அப்படி நினைக்கவில்லை என்றார்.
"தேர்தலுக்கு முன்பு திமுக ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அவற்றுள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பலவற்றைச் சொல்கிறார்களே தவிர, செயல்பாட்டளவில் ஒன்றும் செய்யவில்லை.
"முன்னாள் மத்திய நிதி அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மத்திய அரசு இப்போது மாநில அரசை நசுக்குவதாக ஒரு புகார் கூறப்படுகிறது.
"முன்பு அதிமுக ஆட்சியின்போது மத்தியில் வேறு அரசு இருந்தது. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதுபோன்று குறைகூறவில்லை. தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மத்திய அரசிடம் தீவிரமாக கேட்டுப் பெற்றுக் கொடுத்தார். இன்றைய திமுக அரசும் அப்படித்தான் செயல்பட வேண்டும்," என்றார் சசிகலா.
மத்திய அரசைக் குறைகூறுவது மட்டுமே மாநில அரசின் வேலை அல்ல என்று குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மத்திய அரசை குறை கூறுவதிலேயே நாள்களைக் கடத்தக்கூடாது என்றார்.
'திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை'

