அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் இல்லை
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட மாட்டாது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனினும், 18 முதல் 59 வயது உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்தைச் செலுத்தி பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்: தமிழகத்தில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம்
செங்கல்பட்டு: தமிழகத்தில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு தழுவிய அளவில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 27.1 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழகத்தில் இது 51.4 விழுக்காடாக உள்ளது என தனியார் பல்கலைக்கழக விழாவில் பேசும்போது அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். காலஞ்சென்ற முதல்வர் காமராஜர் பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மறைந்த முதல்வர் கருணாநிதி உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இனிவரும் காலம் உயர் கல்விக்கு பொற்காலமாக இருக்கும் என்றார்.
ஒரு கிலோ ரூ.90: சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை
சென்னை: தக்காளிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் அவற்றின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.90 ஆக அதிகரித்துள் ளது. சில வாரங்களுக்கு முன்பு ஐந்து கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில் நாள்தோறும் 1,200 டன் தக்காளிகள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போது 500 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வந்து சேர்கிறது. கோடை வெயில், அசானி புயல் ஆகிய காரணங்களால் தக்காளி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பான மீட்புப் பணியில் தொய்வு
நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய இருவரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குவாரியில் உள்ள பாறைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் மீட்புப்பணியை அவ்வப்போது நிறுத்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய இருவர் மீட்கப்பட்ட நிலையில், இருவரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. மீதமுள்ள இருவரின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் குவாரிக்கு அருகிலேயே கவலையுடனும் கண்ணீருடனும் காத்துக்கிடக்கின்றனர்.

