அகமதாபாத்: உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் 14 வயதுச் சிறுமி உட்பட 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் குஜராத் மாநிலம் மார்பி மாவட்டத்தில் நேற்று மதியம் நிகழ்ந்தது.
அச்சமயம் சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தொழிற்சாலைக்குள் பெரிய சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
"நான்கைந்து பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் உதவி கேட்டும் மேலும் சிலர் இறந்தவர்களைக் கண்ட அதிர்ச்சியிலும் கூக்குரல் எழுப்பினர்.
"சுவர் இடிந்ததால் ஏற்பட்ட புழுதிப்படலம் காரணமாக சில நிமிடங்களுக்கு எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை," என்று விபத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புத்துறையினர் 12 பேரின் உடல்களையும் படுகாயமடைந்த ஒருவரையும் மீட்டனர்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

