சென்னை: திமுக அமைச்சர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக அமைச்சர்கள் சம்பந்தம் இல்லாத கருத்துகளைத் தெரிவிப்பார்கள் என்றும் கோடைக் காலத்தில் மழை பெய்தால் அதற்கும்கூட, திராவிட பாணி ஆட்சிதான் காரணம் என்பார்கள் என்றும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
திமுக அமைச்சர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அண்ணாமலை, தமிழக அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்தார்.
"தமிழக அமைச்சர்களில் 90% பேருக்கு ஆங்கிலம் தெரியாது. இவர்களால் விமானம் ஏறி டெல்லி சென்று தமிழகத்திற்கான நிதியைக்கூட ஒழுங்காகப் பெற முடியாது.
"திமுகவை வீழ்த்துவது எளிது. அக்கட்சியில் 260 பேர் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்திவிட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை.
"திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று. உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது," என்றார் அண்ணாமலை.
எதிர் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

