திண்டுக்கல்: அமெரிக்காவில் இருந்தபடியே திண்டுக்கல்லில் உள்ள தன் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கறிஞர் ஒருவர் விரட்டியடித்துள்ளார்.
லீனஸ் என்ற அந்த வழக்கறிஞர், அமெரிக்காவில் வசிக்கும் தன் மகளைக் காண, மனைவியுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பூட்டிக்கிடக்கும் அவரது வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று முன்தினம் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.
எனினும், தன் வீடு முழுவதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும் எச்சரிக்கை செய்யும் 'சென்சார்' கருவிகளையும் அவர் நிறுவி உள்ளதால், அமெரிக்காவில் உள்ள அவரது கைபேசியில் எச்சரிக்கை மணி அடித்தது.
இதையடுத்து, அங்கிருந்தபடியே, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தன் வீட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச் செய்துள்ளார் லீனஸ்.
இதனால் கொள்ளையர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், வீட்டை விட்டு கிளம்பவில்லை. இதையடுத்து, வீட்டில் உள்ள ஒலி பெருக்கியின் மூலம் தாம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் கொள்ளையர்கள் பதறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

