சென்னை: பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது காங்கிரசார் வாயில் வெள்ளைத்துணி கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது.
இதையடுத்து, மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று காங்கிரசார் தங்கள் வாயில் வெள்ளைத்துணி கட்டி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 'வன்முறையை எதிர்ப்போம்', 'கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது' என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரறிவாளன் அளித்த மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்த காரணத்தினாலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
"ராஜீவ் காந்தியோடு சேர்த்து ஒன்பது காவல்துறையினர் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.
"பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன்.
"அதே போன்று அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்களுடைய மனநிலையையும் நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக்கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது," என்றார் கே.எஸ்.அழகிரி.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.
நேற்று மதுரை தல்லாகுளம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையம், நாமக்கல் பூங்கா சாலை என மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன வலியை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மத்தியில் உள்ள பாஜக அரசு செயலற்ற நிலையில் இருந்ததே பேரறிவாளன் விடுதலைக்கு காரணமாகி உள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது சாடினார்.

