கடலூர்: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழையும் பெய்து வருகிறது. இதனால் சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு நேற்று முன்தினம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து இரண்டாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதே இதற்குக் காரணம்.
இதையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஐந்து மாவட்டங்களில் நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், ஒக்கேனக்கல் பகுதியிலும் நல்ல மழை பெய்து வருவதால், அங்கு பரிசல் ஓட்டவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் நான்கு நாள்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றில் கூறிஉள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் அம்மையம் தெரிவித்தது.

