சென்னை: சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ திட்டத்தின் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் கலங்கரை விளக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றும் கட்டப்பட உள்ளது.
இந்த ரயில் நிலையம் மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்கப்
படுகிறது. கட்டுமானப் பணிகளின்போது சேதமடைவதைத் தவிர்க்க காந்தி சிலையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தடையில்லா சான்றிதழை தற்போது சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. காந்தி சிலையை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் முடியும் வரையில் மாற்று இடத்தில் வைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உள்ளது. இதற்கான இடத்தைக் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ பணிகள் முடிவுற்ற பின்னர், பழைய இடத்திலேயே மீண்டும் சிலை வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

