கே.எஸ்.அழகிரி பேட்டியை அடுத்து கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாகத் தகவல்
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அது தொடர்பான பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழக ஆளுநர் தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது.
இதையடுத்து சிறையில் உள்ள மற்ற ஆறு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி வசதி மூலம் ஆறு பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மூத்த அமைச்சர்களும் தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞரும் அரசு சார்பில் பங்கேற்றனர். மேலும், மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட நிலையில், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற ஒருவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கும்போது இதயம் ரத்தக் கண்ணீர் வடிப்பதாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தொண்டர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் எப்போதும் குற்றவாளிதான் என்றும் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது என்றும் அழகிரி தெரிவித்தார்.
பேரறிவாளன் விடுதலையை திமுகவினரும் அதிமுகவினரும்தான் கொண்டாடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள், இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுமா எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, "கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டுதானே நாங்களும் கூட்டணி வைத்தோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும் அதற்கும் தொடர்பு இல்லை," என்றார்.
பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடி வருவது காங்கிரஸ் தலைமைக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறு பேர் விடுதலை தொடர்பாகவும் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

