இந்தோனீசியா: குமரி மீனவர் மரணம்
குமரி: கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித்ததாகக் கூறி இந்தோனீசிய கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரைச் சேர்ந்த 33 வயதான மரிய ஜெசின்தாஸ், கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் தீவில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். கடந்த மார்ச் 7ஆம் தேதி அந்தப் படகில் இருந்த எட்டு பேரை இந்தோனீசிய கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் ஜெசின்தாஸ் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தார் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மரிய ஜெசின்தாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல்லை கல்குவாரி உரிமையாளரும் மகனும் கர்நாடகாவில் கைது
நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலியானதை அடுத்து, நெல்லை காவல்துறையினர் குவாரி உரிமையாளரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். கடந்த 14ஆம் தேதி நெல்லையில் உள்ள அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து நிகழ்ந்தது. இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்ட போதிலும் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து குவாரி உரிமையாளரும் அவரது மகனும் தலைமறைவாகினர். எனினும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கர்நாடகாவில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.
தேனீக்கள் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்
திண்டுக்கல்: தேனீக்கள் வளர்ப்பு தொடர்பாக நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த 13 வயது மாணவர் முகமது தில்ஷான் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பண்ணை அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் உலக தேனீக்கள் தினத்தையொட்டி தன் கழுத்துப் பகுதியில் தாடியைப் போல் தேனீக்களைப் பரவவிட்டு பார்ப்பவரை ஆச்சரியப்படுத்தி உள்ளார் முகமது தில்ஷான். "தாவரங்களின் மகரந்த சேர்க்கை, விளைச்சல் ஆகியவற்றுக்கு தேனீக்கள் அத்தியாவசியமானவை. எனவே விவசாயிகளிடம் தேனீக்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்," என்கிறார் முகமது தில்ஷான்..
மது அருந்துவதை கண்டித்த இரு மகள்களை அடித்துக்கொன்ற தந்தை
காஞ்சிபுரம்: மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததை கண்டித்த இரண்டு மகள்களை அடித்துக் கொன்றவர் கைதானார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 42 வயதான கோவிந்தராஜ் மது அருந்திவிட்டு மனைவி கீதாவுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மனைவி வேலைக்குச் சென்ற பின் மது அருந்திவிட்டு வீடு திரும்பிய கோவிந்தராஜை அவரது மூத்த மகள் நந்தினி (16 வயது) கண்டித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து நந்தினியின் தலையில் அடித்ததுடன் கழுத்தையும் நெரித்துள்ளார். அக்காவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த 15 வயது நதியாவையும் கட்டையால் தாக்கி னார் கோவிந்தராஜ். இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். கோவிந்தராஜ் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
போலி மருத்துவரால் சிறுமி உயிரிழப்பு
மதுரை: போலி மருத்துவர் அளித்த சிகிச்சைக்கு பின் சிறுமி உயிரிழந்தது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியான லட்சிதாவை அவரது தந்தை கடந்த 7ஆம் தேதி அருகிலுள்ள மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர் சத்தியசீலன் குழந்தைக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் உடல்நிலை மேலும் மோசமடைந்து சிறுமி உயிரிழந்தாள். விசாரணையில் சத்தியசீலன் போலி மருத்துவர் எனத் தெரியவந்தது.

