சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத போதும் பாஜக அதனைச் செய்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆனால் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 குறைப்பதாகவும் சமையல் எரிவாயு உருளைக்கு தலா ரூ.100 தருவதாகவும் சொல்லி ஆட்சிக்கு வந்தது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
72 மணி நேரத்துக்குள் விலை குறைப்பு குறித்து அறிவிக்கவில்லை எனில் பாஜக தொண்டர்களுடன் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
"மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தால் நாங்களும் குறைப்பதாக தமிழக அரசுத்தரப்பில் கூறி உள்ளனர். 2014ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசு வாட் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.7 அதிகப்படுத்தி உள்ளது.
"பெட்ரோலிய பொருள்கள் மூலம் மாநில அரசுக்கு 2014ஆம் ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் இருந்தது. தற்போது அது ரூ.19 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது," என்று அண்ணாமலை அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதுகுறித்து தமிழக நிதி அமைச்சர் எதுவும் பேசுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுக தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும்போது பாஜக தலைவர்களிடமா அனுமதி பெற்றனர் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் வேளையில் அரசியல் லாபத்திற்காக வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தற்போது வேறு காரணங்களைக் கூறுவதாகச் சாடியுள்ள அண்ணாமலை, எத்தனை முறை சொன்னாலும் மக்களின் துன்பத்தைக் கண்டுகொள்ளாமல் அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக அரசை மக்கள் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"மாநில அரசுக்கு பாஜக 72 மணி நேரம் கெடு விதிக்கிறது. அதற்குள் திமுக மக்களிடம் தந்த தேர்தல் வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டும்.
"மூன்று நாள்களுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு ரூ.100 என செய்ய வேண்டும்.
"இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிட்டுப் போராடினால்தான் சாதிக்க முடியும் எனில் பாஜக அதற்குத் தயார்," என்று அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்.

