முறைகேடு தொடர்பில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பதிவுத்துறை நடவடிக்கை
சென்னை: விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இயங்கி வரும் சீட்டு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அளித்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு பதிவுத்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது.
சீட்டு நிறுவனங்கள், ஏலச் சீட்டுகள் நடத்துவோர் முதலில் பதிவுத்துறையில் உள்ள சீட்டுப்பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், தாங்கள் அறிவிக்கும் சீட்டு திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் சீட்டுத் திட்டங்களுக்கு இணையான தொகையை அந்தத் திட்டங்கள் முடியும் காலம் வரை வங்கியில் வைப்புத்தொகையாகச் செலுத்தி, அதற்குரிய ஆவணங்களையும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறைகளில் ஒன்றாகும்.
ஆனால், பல நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. பதிவுத்துறையில் முறையாகப் பதிவு செய்யாமல் இயங்கும் அத்தகைய நிறுவனங்கள் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று ஏமாற்றுகின்றன.
இதையடுத்து, சீட்டு நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் சில நிறுவனங்களின் செயல்பாடுகள், குறிப்பாக, பணப்பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர் விவரங்கள், அறிவிக்கப்பட்டுள்ள சீட்டுத் திட்டங்கள் ஆகியவை குறித்து பதிவுத்துறை ஆய்வு மேற்கொள்கிறது.
முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில், சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மாநிலத்தில் 2,621 சீட்டு நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
உரிய பதிவு இன்றிச் செயல்படும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

