சிவகங்கை: கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் (படம்) கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
தொடர் அகழாய்வின்போது மேலும் உறுதியான ஆதாரங்கள் வெளிப்பட வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பழம்பெரும் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் ஐந்து குழிகளும் கொந்தகை, அகரத்தில் தலா இரண்டு குழிகளும் தோண்டப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் கீழடியில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
தற்போது இரும்பைக் காய்ச்சும்போது மிஞ்சும் உருக்கு கழிவுகளும் கிடைத்துள்ளன.
இதன் மூலம் இரும்பைக் காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களைச் செய்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

