அரியலூர்: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 45. இவர், சென்னையில் உள்ள கணினி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமிபிரியா, 36, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
கார்த்திகேயன் தனது மனைவி லட்சுமிபிரியா, தாய் மஞ்சுளா, 62, மகள்கள் மித்ரா, 13, யாஷினி, 8, ஆகியோருடன் காரில் ராமேசுவரத்துக்குச் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன், லட்சுமிபிரியா, மஞ்சுளா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த யாஷினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாண்டார். மித்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

