3,500 வயது மாமரத்தில் காய்கள்
காஞ்சிபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கருவறைக்குப் பின்புறமுள்ள பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடையது என்று நம்பப்படும் இந்த மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளைக் கொண்ட பழங்களைத் தருகிறது. தற்போது இந்த மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த மாமரத்தை பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.
'கொலைநகரமான தலைநகரம்'
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர், "சென்னையில் கடந்த 20 நாள்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலே முழுமுயற்சியுடன் இருப்பதால், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தொற்று
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு கொவிட்-19 தொற்று அறிகுறி கள் காணப்பட்டன. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ் புறக்கணிப்புக்கு எதிர்ப்பு
மன்னார்குடி: வங்கி எழுத்தர் பணியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிபோகும் என்று அவர்கள் கூறினர். மன்னார்குடி மேல ராஜவீதி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பா.கவி பாரதி தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் இளைய மன்னர் மரணம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேசுவரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் குழுத் தலைவருமான குமரன் சேதுபதி (படம்) நேற்று திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
ராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசம் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குமரன் சேதுபதியின் உடலுக்கு பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

