சென்னை: இனி ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணிமேரி கல்லூரி யில் நேற்று நடந்த மாநில அளவிலான இளைஞர் திறன் திருவிழாவில் பேசிய திரு ஸ்டாலின், "இளைஞர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் திராவிட மாடல் அரசு என்றும் முன்னோடியாகத் திகழும்," என்றார்.
"இளைஞர்கள் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல, மாணவிகளும் தான். 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் அதிகமுள்ள நாடு இந்தியா. இளைஞர்களை மாபெரும் சக்தி படைத்தவர்களாக உருவாக்க அடிப்படை கல்வி மட்டுமல்ல; உயர்கல்வியும் தந்தாக வேண்டும். அதன்பிறகு வேலை, அதற்கேற்ற ஊதியத்தை தரவேண்டும். இந்த உழைப்பு சக்கரத்தை சரியாகத் தரும் அரசுதான் திமுக அரசு," என்று முதல்வர் பேசினார்.

