மோப்பநாயுடன் வெடிகுண்டு சோதனை
கடலூர்: சென்னை காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு செய்து பேசிய ஆடவர் ஒருவர், கடலூர் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் என்றும் எச்சரித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனையின் அைனத்து இடங்களிலும் கடலூர் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இரண்டு மணி நேரமாகியும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அைழப்பு விடுத்தவர் புரளி கிளப்பியது தெரிந்தது. அவர் யார்? எங்கிருந்து பேசினார்? என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
நியாயவிலைக் கடையில் தக்காளி
சென்னை: தமிழகத்தில் தக்காளி விலையைக் கட்டுப் படுத்தும் நோக்கில், அவற்றை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு மலிவு விலையில் நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு குறிப்பிட்டுள்ளது.
வீரப்பன் சகோதரர் காலமானார்
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன், 75, உடல்நலக் குறைவால் காலமானார். சேலம் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக கடந்த 25 நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.
கைபேசி வழியாக மின்சாரம்
பாய்ந்து சிறுவன் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் புகைப்படக் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில். இவரது 9 வயது மகன் கோபிநாத், வீட்டில் கைபேசியை மின்னூட்டியில் (சார்ஜர்) இருந்து கழற்றி எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அவனைப் பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர். முதற்கட்ட தகவலின்படி, வீட்டில் அத்தையின் கைபேசி மின்னூட்டியில் போடப்பட்டிருந்தபோது, குளித்து விட்டு ஈரக் கையோடு வந்த சிறுவன் மின்னூட்டியில் இருந்த கைபேசியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன். அவரது அண்ணன் மாதையன் (வலது). படம்: ஊடகம்

