ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற 40 வயது மீனவப் பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிரோடு எரித்துக் கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு வட மாநிலத்தவர்களிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளி களுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் நேற்று காலை முதல் போராட்டம் நடத்தி னர். ஆங்காங்கே மீனவர்கள் டயர்களை தீவைத்து எரித்தனர்.
உயிரிழந்த மீனவப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கக் கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இதனால் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணை
உயிரிழந்த பெண் செவ்வாய்க்கிழமை காலையில் கடல்பாசி சேகரிக்கச் சென்றபோது, வடகாடு காட்டுப் பகுதியில் வைத்து, இறால் பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என மருத்துவர்களின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், கிராம மக்களால் அடித்து, தாக்கி பிடித்து வைக்கப்பட்ட ஆறு இளைஞர்களில், பாலியல் வன்கொடுமை செய்த மூவர் யார் என்பது தெரியவில்லை.

