சென்னை: தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், முதலில் 'வணக்கம்' என்று தமிழில் குறிப்பிட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறைகளிலும் தலைச் சிறந்தவர்களாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டு மண் என்பது சிறப்பு வாய்ந்தது என்றார்.
"தமிழகத்துக்கு மீண்டும் வருவது என்பது சிறப்பான ஒன்று. தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் மொழி பழைமையானது, அனைத்துலக அளவில் புகழ்பெற்றது.
"சென்னை-கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல்-நியூயார்க், சேலம்-தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் இருக்கிறது," என்றார் பிரதமர் மோடி.
முன்னதாகப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது என்று குறிப்பிட்ட அவர், கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார்.
"மாநிலங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதிப்பங்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம். ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்தி மொழிக்கு இணையான தமிழ் மொழியை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என்றும் வரியைச் சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"கச்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இதுவே தகுந்த தருணம். நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும்," என்றார் மு.க.ஸ்டாலின்.
விமான நிலையத்தில் இருந்து பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற நேரு அரங்கம் வரை செல்லும் வழியெங்கும் பாஜகவினரும் திமுகவினரும் கூடியிருந்தனர். திமுகவினர் 'தளபதி வாழ்க' என்று முழக்கமிட, பாஜகவினரும் 'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

