திருவள்ளூர்: பிரசவ அறுவை சிகிச்சையின்போது பெண் வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு திருத்தணியைச் சேர்ந்த குபேந்திரி என்ற பெண்ணுக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவமானது.
அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த நிலையில், பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவினர் கவனக்குறைவாக அவரது வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து தைத்துவிட்டனர்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேந்திரிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. பல நாள்கள் வலி நீடித்தது.
இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சென்னை அரசு மருத்துவமனையில் குபேந்திரி அனுமதிக்கப் பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்திரிக்கோலை அகற்றினர்.
இது தொடர்பாக குபேந்திரிக்கு பிரசவம் பார்த்த மருத்துவக்குழுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அது தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

