சென்னை: பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நான்கு பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சென்னையைச் சேர்ந்த 34 வயதான பாலச்சந்தர், பாஜக பட்டியலினப் பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலச்சந்தர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
அவருக்குப் பாதுகாப்பாக உடன் வரும் காவலர் தேநீர் அருந்த அருகிலுள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற நேரத்தில், சாலையோரம் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார் பாலச்சந்தர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கொலையாளிகள், திடீரென அங்கு வந்து பாலச்சந்தரை சுற்றி வளைத்து அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
பாதுகாப்புக் காவலர் வருவதற்குள் கொலையாளிகள் ஆறு பேரும் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலச்சந்தரின் உறவினர்கள் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அந்தக் கடையில் லஞ்சம் கேட்டு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டி வந்துள்ளார். அதுகுறித்து தெரிய வந்ததும் பாலச்சந்தர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் பிரதீப் கைதானார்.
இதனால் பிரதீப்பின் தந்தை தர்கா மோகனுக்கும் பாலச்சந்தருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரதீப், பத்து நாள்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து, அவர் மீண்டும் அத்துணிக்கடைக்குச் சென்று மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் அவர் மீது காவல்துறையிடம் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கடும் கோபம் அடைந்த பிரதீப், அவரது சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து பாலச்சந்தரை வெட்டிக்கொன்றுள்ளனர்.
இதற்கிடையே, பாலச்சந்தர் மீதும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ரவுடிகள் பட்டியலில் இருந்ததாகவும் 2019ஆம் ஆண்டுதான் அதிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது என்றும் ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவரைக் கொலை செய்த பிரதீப் உள்ளிட்டவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலிசார் அங்கு விரைந்து சென்று பிரதீப் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும் இரண்டு பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.