அண்ணா பல்கலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பல்கலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள 160 பேர் பரிசோதிக்கப்பட்டதில், 11
பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், ஐஐடி அமைந்துள்ள சென்னை கிண்டி பகுதியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் தொற்று பரவி உள்ளது.
மீதமுள்ள ஆறு பேரை விடுவிக்கக்கோரி முதல்வருக்கு ரவிச்சந்திரன் கடிதம்
தூத்துக்குடி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். தற்போது சிறை விடுப்பில் வெளியே வந்து தூத்துக்குடியில் தங்கி உள்ள அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், சிறை விடுப்பில் உள்ளதால் உடல் நலம் குன்றிய தனது வயதான தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவைக் கவிழ்த்த கவுன்சிலர்
தென்காசி: குற்றாலம் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தார். அப்பேரூராட்சியில் மொத்தம் உள்ள எட்டு வார்டுகளில் அதிமுகவும் திமுகவும் தலா நான்கு இடங்களில் வெற்றிபெற்றன. இதனால் தலைவரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலின்போது திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக இழந்தது.
ஜல்லிக்கட்டில் 90 பேர் காயம்
சிவகங்கை: மானாமதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் மோதியதில் 90 பேர் காயம் அடைந்தனர். 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

