பொட்டலமாக அரிசி, பருப்பு, சீனி
சென்னை: தானியங்களை அளந்து கொடுக்கும்போது எடை குறைவதாக குற்றச்சாட்டு கூறப்படுவதால், மலிவு விலைக் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அரிசி கடத்தப்படும் சம்பவங்களைத் தடுக்க பக்கத்து மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மூன்று திமுக வேட்பாளர்கள்
வேட்புமனுத் தாக்கல்
சென்னை: திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக எம்பிக்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக்காலமும் அதிமுக எம்பிக்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலமும் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
குட்காவுக்கு தடை நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்தப் பொருள்களுக்கு தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, குட்கா, புகையிலை, பான் மசாலா ஆகிய பொருள்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது, பதுக்கி வைப்பது குற்றமாகும்.
தக்காளிப் பெட்டிகள் திருட்டு
சேலம்: தமிழகத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்திருந்த நிலையில், ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதையடுத்து, புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளிப் பெட்டிகளை அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தக்காளியைப் பறிகொடுத்தவர் இதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
மின்னல் தாக்கி கோபுரம் சேதம்
திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, பூசாரிபாளையம் கிராமத்தில் இருந்த அங்காளம்மன் கோயிலின் கோபுரக் கலசமும் சிலைகளும் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தன. கோபுரத்தின் மூன்று கலசங்களில் ஒன்று கீழே விழுந்தது. மேலும், கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளும் உடைந்து சேதமாகின.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58வது நினைவு தினம்
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக கடந்த 1947ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற ஜவகர்லால் நேரு, இறக்கும் வரை பிரதமராக பதவி வகித்தார். 1964 மே 27ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.

