சென்னை: சென்னை, துபாயில் வசிக்கும் விவாகரத்தான பெண்கள் பலரிடம் திருமண ஆசை காட்டி மோசம் செய்துள்ள அரவிந்த் என்ற ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
"மேட்ரிமோனி திருமண வலைத் தளம் மூலம் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களைக் குறிவைத்து திருமணம் செய்வதாகக் கூறி பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விடுவது என் வாடிக்கை. சென்னை தேனாம்பேட்டையில் என்மீது இதுபோன்று பல பெண்கள் புகார் அளித்துள்ளனர்," என்று விசாரணையில் அரவிந்த் சொன்னார்.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார்.
ஆட்களைத் தேர்வு செய்து பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் தீபா. இவருக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் அறிமுகமாகியுள்ளார்.
தீபாவிடம் தான் துபாயில் பணி புரிந்து வருவதாகவும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் நல்ல வரனைப் பார்த்து வருவதாகவும் அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய தீபா, அரவிந்தனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மிகவும் அன்பானவராக நடந்து கொண்ட அரவிந்தை தீபா திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். அரவிந்தை மிகவும் நம்பியிருந்த தீபாவிடம், தாய் தந்தையின்றி தனிமையில் இருக்கும் உன்னிடம் நகைகள், பணம் இருப்பது பாதுகாப்பு இல்லை. எனவே, அவற்றை தன்னிடம் கொடுத்து வைத்தால் பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதனை நம்பிய தீபா, தனது 50 சவரன் நகை, பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார். நகைகள், பணத்தைப் பெற்றுக்கொண்டபின் அரவிந்தனை தொடர்புகொள்ள முடியவில்லை. அரவிந்தன் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தீபா விசாரித்தபோது அரவிந்த் ஏற்ெகனவே திருமணமாகி குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தீபா சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

