சேலம்: சேலத்தில் மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 700 கிலோ கலப்பட மசாலாவைப் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான பொருள்களைக் கொண்டு சாம்பார் மசாலா, கோழி, இறைச்சி மசாலா, ரசப்பொடி, மிளகுத் தூள் உள்ளிட்ட மசாலா பொருள்களைத் தயாரித்திருந்தது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, மசாலாப் பொட்டலங்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகர், உடையாப்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்த ஏற்காடு மசாலா நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ அளவில் கலப்பட மசாலா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மசாலா மற்ற மளிகைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? இங்கு தயாரிக்கப்பட்ட மசாலாக்கள் வேறு எங்காவது ஆல யங்கள், சமையல் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். கடைகளில் அவற்றை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மசாலாக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், உடையாப்பட்டில் வீடுபோல் அமைத்து, மசாலா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடையின் உரிமையாளர் பழனியப்பனிடமும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து கடும் நட வடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

