சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம், சென்னை அருகே திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இளைஞரணி தலைவராக இருந்து வரும் இவர், தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றி வருகிறார்.
அன்புமணி தலைவராக அறி விக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய மாவட்டச் செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்தகிருஷ்ணன், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாளைப் பரிசளித்தனர்.
தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலை கள் அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். அன்புமணியைக் கட்டித் தழுவி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியை அடுத்தகட்டமாக வழிநடத்திச் செல்லும் வகையில் அன்புமணியை வாழ்த்தி '2.0' என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. 'ஆளப்போகிறான் பாட்டாளி', '2026ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்' என்று பாமகவினர் முழங்கினர்.
இதையடுத்து, வரப்போகும் தேர்தலுக்கு பாமக தயாராகி வருவதாகவும் எம்பி மற்றும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அன்புமணியின் அரசியல் களம் நகரப் போவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

