சென்னை: தெருக்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது என சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அவற்றின் பெயர் பலகைகளை மாநகராட்சிதான் பராமரித்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், 'சிங்கார சென்னை 2.0' என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பெயர்ப் பலகைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதற்காக ரூ. 8.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வார்டாகச் சென்று மாநகராட்சி ஊழியர்கள் பெயர்ப்பலகைகளை மாற்றியமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
புதிய பெயர்ப்பலகைகளில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் இலச்சினை இடம்பெற்றிருக்கும். மேலும், தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் காணப்படும்.
முன்பு சென்னையில் உள்ள ஏராளமான தெருக்களின் பெயரோடு சாதிப்பெயரும் இடம்பெற்றிருக்கும். நாளடைவில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. எனினும் இந்தப் பணி முழுமை அடையவில்லை.
அதை மனதிற்கொண்டே சென்னை மாநகராட்சித் தரப்பில் மீண்டும் அத்தகையதொரு முயற்சி தொடங்கி உள்ளது.
சென்னையின் 171வது வார்டில் அப்பாவு கிராமணி என்ற தெரு உள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இத்தெருவின் பெயரை மாற்ற வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அத்தெருவின் பெயர் அப்பாவு (கி) தெரு என மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள தெருக்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பெயர்ப்பலகைகளில் மாற்றம்

