செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8db2ab25-8ea9-4a09-9297-d20f78363c82
-

ஜெர்மனி தொழில் கண்காட்சியில்

தமிழக அரசு சார்பில் அரங்கு

சென்னை: ஜெர்மனியில் இருந்து புதிய முதலீடுகளைக் கவரும் விதமாக அங்கு நடைபெற உள்ள தொழில் கண்காட்சியில் தமிழக அரசு பங்கேற்க உள்ளது. மே 30ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நிகழ்வில் அரங்கு அமைக்கின்றது தமிழ்நாடு அரசு. ஆற்றல், உற்பத்தி, தளவாடத்துறைகளில் தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது என்றும் தொழில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கண்காட்சிக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் தொழில் வளர்ச்சி, முதலீடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அகத்தீஸ்வரம் கோவில் கற்சிலைகள் மாயம் என பொன்மாணிக்கவேல் புகார்

திண்டிவனம்: அகத்தீஸ்வரம் கோவிலில் இருந்து பழமை வாய்ந்த ஐந்து கற்சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தச் சிலைகள் பயன்பாட்டில் இருந்ததாகவும் பாதுகாப்பு கருதி அவை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நீண்ட காலத்துக்குப் பிறகும்கூட, அச்சிலைகள் ஆலயத் தரப்பிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொன்மாணிக்கவேல், மாயமான சிலைகளில் சில அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவை 70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்: ரூ.6.8 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

சென்னை: கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ரூ.6.8 கோடி மதிப்புடைய போதைப்பாக்கு, குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் பட்டியல்: பாஜக எச்சரிக்கை

புதுடெல்லி: தமிழக அமைச்சர்கள் இருவர் செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவ்விரு அமைச்சர்களும் செய்த ஊழல்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் அடுத்து வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக அரசு குறித்தும் அமைச்சர் களின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்ந்நிலையில், அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.