சென்னை: தாய் மொழி, தாய் நாட்டை எந்த வகையிலும் மறக்கக்கூடாது என்று துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
அம்மாவை தாய்மொழியில் அழைத்தால் அந்தக் குரல் இதயத்தில் இருந்து வரும் என்றும் தாய்மொழி என்பது ஒருவரது கண்ணின் பார்வை போன்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை அதிபர், 'மம்மி, டாடி' என்று அழைக்கும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
"கண்பார்வை போன்ற தாய் மொழியைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் கண்ணாடி போன்றவை. பார்வை இல்லாவிட்டால் கண்ணாடியால் எந்தப் பயனும் இல்லை. வீட்டில் தாய் மொழியில் பேசுங்கள்.
"நமது தாய் மொழி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் வேறு மொழியில் உரையாடலாம். மற்ற மொழிகளைப் படிப்பதில் தவறு இல்லை. ஆனால் தாய்மொழியைப் படித்துவிட வேண்டும்.
"உயர் பதவிக்கு வந்தாலும் எனது பாரம்பரிய உடையைக் கூட நான் மாற்றிக்கொள்ளவில்லை. நாம் எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது. ஆனால், நமது தாய் மொழியை நாம் ஆதரிக்க வேண்டும்," என்றார் துணை அதிபர் வெங்கையா நாயுடு.
தற்போது சில முரண்பாடுகள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் மொழிகளை எதிர்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
நிலையான அரசாட்சி வழங்கிய ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த பேச்சாளர் கருணாநிதி என்றும் தமது மாணவப் பருவம் முதல் கருணாநிதியின் பேச்சுக்களை உன்னிப்பாகக் கவனித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கொள்கைகளையும் யோசனைகளையும் அவர் சொன்ன விதம், அந்த இளம் வயதில் என்னை ஈர்த்தது. எனக்கென்று ஓர் அரசியல் கொள்கை இருந்தது. அவரது கொள்கையில் இருந்து மாறுபட்டு இருந்தாலும், தனது கருத்துகளை மக்கள் மத்தியில் அவர் கொண்டு சேர்த்த விதம் என்னைக் கவர்ந்தது," என்று துணை அதிபர் வெங்கையா தெரிவித்தார்.
"கருணாநிதி, கூர்மதியுள்ள அரசியல்வாதியாக இருந்து, போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவரது கட்சியின் தலைமை பதவியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தார்.
"தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவர் கருணாநிதி," என்று துணை அதிபர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.

