தர்மபுரி: நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை தர்மபுரி காவல்துறை கைது செய்துள்ளது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை நவீன 'ஸ்கேன்' கருவி மூலம் முன்பே தெரிந்துகொண்டு, அதன் பின்னர் இந்தக் கருக்கலைப்புகள் அரங்கேறி உள்ளன.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 27 வயதான வனஜா என்பவருக்கு அரைகுறையாக கருக்கலைப்பு செய்ததை அடுத்து அவர் காவல்துறையில் அளித்த புகார் காரணமாக இந்தக் கருக்கலைப்பு கும்பல் சிக்கியுள்ளது.
வனஜாவுக்கு ஏற்கெனவே இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் மீண்டும் தாய்மை அடைந்தார். பெண் குழந்தையாக இருப்பின் கருக்கலைப்பு செய்துவிடலாம் என்று தன் கணவருடன் பேசி முடிவு செய்துள்ளார் வனஜா.
இந்நிலையில் சட்டவிரோத கருக்கலைப்பு கும்பல் குறித்து வனஜாவுக்குத் தெரியவந்துள்ளது. இடைத்தரகர் மூலம் அணுகியபோது குறிப்பிட்ட ஒரு பரிசோதனை மையத்திற்குச் செல்லுமாறு அவர் கூறியுள்ளார்.
அங்கு பரிசோதித்ததில் பெண் குழந்தை எனத் தெரியவந்ததை அடுத்து, கருக்கலைப்புக்குத் தயாரானார் வனஜா. அவரை உடனடியாக அருகில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது கண்கள் துணியால் கட்டப்பட்டன.
கருக்கலைப்பு செய்த சில நாள்களுக்குப் பின்னர் வனஜாவுக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்படவே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்ததில், கருக்கலைப்பின்போது சிசுவின் தலையை மட்டும் வெளியே எடுத்திருப்பதும் பாதி உடல் கருப்பையிலேயே இருந்ததும் தெரியவந்தது.
வனஜா கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சிசு முழுமையாக அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்க்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவரது உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கருக்கலைப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக 38 வயதான கற்பகம் என்ற தாதியர் உட்பட ஏழு பேர் கைதாகினர். இவரைத் தவிர வேறு யாருக்கும் மருத்துவத்துறையுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
இவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வீடு வீடாகச் சென்று கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் செய்து சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தி, குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதற்காக கணிசமான தொகை வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் சிசுவின் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும்.

