ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு மாற்றம்
மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் குற்றமற்றவர் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சான்றிதழ் அளித்திருந்த நிலையில் சமீர் மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பதியைப் போல திருச்செந்தூர்
சென்னை: ரூ.200 கோடி செலவில் திருப்பதி கோயிலைப் போலவே திருச்செந்தூர் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஒரேநேரத்தில் 5,000 பக்தர்கள் வந்தால்கூட அவர்களுக்கு நல்லமுறையில் வசதிகளைச் செய்து தரவும் அவர்களை வரிசையாக அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். திருச்செந்தூர் கோவிலில் மட்டுமின்றி திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அவர் கூறினார்.
சொத்தை எழுதிக்கொடுத்த அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம்: வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தனக்குச் சொந்தமான 66 செண்ட் நிலத்தை மலைவாழ் மக்களுக்காகத் தானமாக வழங்கியிருக்கிறார். செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் சென்ற அமைச்சர், பத்திரப்பதிவு நடைமுறையைப் பின்பற்றி ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு மாற்றிக்கொடுத்தார்.
மீனை அலசி, சுத்தம் செய்து மகளை மருத்துவம் படிக்கவைத்த பெண்
மீனை வெட்டி அதனை சுத்தம் செய்து, தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த ரமணியையும் அவரது மகள் விஜயலட்சுமியையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர். படம்: தமிழக ஊடகம்
மயிலாடுதுறை: இரு நாள் சுற்றுப்பயணமாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறையில் தூர்வாரும் பணி, இயந்திர நெல் நடவுப் பணிகளை நேற்று பார்வையிட்டார்.
அப்போது, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு உணவகத்துக்கு மீனைக் கழுவி சுத்தம் செய்து தந்து, தனது மகளை மருத்துவராக்கிய ரமணி என்ற பெண்ணையும் அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமி, மகன் ரவிச்சந்திரன் ஆகியோரையும் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை முதல்வர் கூறினார்.
இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது, ரமணியின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
சந்தையில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி, செதில்களை நீக்கி அதைத் துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பதுதான் ரமணியின் பணியாகும். இந்த சூழலிலும் தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்கவைத்து தற்போது மருத்துவர் ஆக்கியுள்ளார்.
'வெஸ்ட் நைல்' காய்ச்சல் குறித்து
மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை
சென்னை: கொசுக்கள் மூலம் பரவும் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களது விவரங்களை உடனடியாகத் தெரிவிக்கவேண்டும் என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
க்யூலெக்ஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்நோய் பரவுகிறது. கடும் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை 'வெஸ்ட் நைல்' காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

