சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி மறைந்துவிட்டதாக தகவல் பரவியது. அப்போது நாமக்கல்லில் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அதனை மக்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.
ஆனால் அந்தத் தகவல் தவறானது என்பதை அறிந்த அவர், ஆற்காடு வீராசாமி நலமுடன்தான் இருக்கிறார் என்று கூறினார்.
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி எம்.பி. டுவிட்டரில் அண்ணா மலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், தனது கொள்ளுப்பேரனின் பிறந்த நாள் விழாவில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்தும் எப்போதும் எங்கள் தலைவர்களைப் பற்றியும் உளறும் பா.ஜனதா தலைவர் தவ றான கருத்தைக் கூறியதற்கு வேதனையுடன் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் ெதரிவித்திருந்தார்.
இதையறிந்த அண்ணாமலை வருத்தம் தெரிவித்து பதிவிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: உங்களுடைய தந்தையார் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடும் நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகிறேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்ட திமுகவினர் அண்ணாமலையை வறுத்து எடுத்துவிட்டனர்.
'முட்டாள்தனமான பேச்சு', 'வாய்திறந்தாலே பொய்தான்' என திமுகவினர் சரமாரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
உடனே பாஜகவினரும் அவர்களுக்குப் பதிலடி தந்தனர். "தப்பு செய்தால் மன்னிப்பு கேட்பவன் மனிதன். வாழ்க்கையில் தப்பாகப் பேசி தாங்கள் செய்வது, சொல்வது எல்லாம் சரி என்று நினைக்கும் கூட்டத்துக்கு மத்தியில் கறை படியாதவர் அண்ணாமலை. தான் சொன்ன தகவல் தவறென்றவுடன் வருந்துகிறேன் என பதிலளிக்கும் பண்பு திமுக தலைவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்று பாஜகவினர் பதிவிட்டுள்ளனர்.

