ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமி யிடமிருந்து சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்கப்பட்ட விவகாரத்தில் புதுப் புது தகவல்கள் வெளியாகிவரும் ஈரோட்டில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் 3வது முறையாக காவல்துறை சூப்பிரிடன்டெண்ட் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர், போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்த நபர் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் தீவிர விசாரணை நடத்தி வரும் ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான காவல்துறை குழு, இரண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியது.
மேலும் திருவனந்தபுரம், திருப்பதியிலும் இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக சிறுமியை அழைத்துச் சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் கருமுட்டை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது பெருந்துறை மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கருமுட்டை தேவைப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பெருந்துறை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளது. இதையடுத்து பெருந்துறை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாட்டில் இந்த சிறுமியை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக அந்த சிறுமிக்கு பெருந்துறை மருத்துவமனை யிலேயே அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு கருமுட்டை எடுக்க தயாரான நிலையில் அவரை திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்கு சிறுமியை அனுமதித்து மயக்க ஊசி செலுத்தி கருமுட்டை எடுக்கப்பட்டது.
இதேபோல் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் 3வது முறையாக ஈரோட்டில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை சூப்பிரிடன்டெண்ட் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே ஈரோடு கரு முட்டை விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்கு முறை சட்டத்தை அமல் படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப் பட்ட சட்டத்தை அமல்படுத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும் குடும்ப நலத்துறை இயக்குநர் துணைத் தலைவராகவும் இருக்கின்றனர்.

